Lessons of Jesus
Chapter 1: Couldn’t even find time to eat
Chapter 1: Couldn’t even find time to eat
Previous Chapter: Introduction
கர்த்தர் தான் வளர்ந்த ஊருக்கு தன்னுடைய சீஷர்களை அழைத்து சென்ற பொழுது, கர்த்தரை அறிந்தவர்கள், இவர் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? என்று சொன்னதை கேட்ட சீஷர்களுக்கு, இயேசுவும் நம்மை போல ஒரு சாதாரண மனிதன் என்கிற எண்ணம் தான் இருதயத்தில் பதிந்திருக்கும் - 3.இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும், இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். 4.இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார் - மாற்கு 6:3-4
அதன் பின்பு, கர்த்தர் தன்னுடைய சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்பின பொழுது, மக்கள் கர்த்தரை குறித்து, எலியா அல்லது பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்று பேசினார்கள், அதை கேட்ட சீஷர்களும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை, ஏனென்றால் சீஷர்களும் கர்த்தரை ஒரு வரம் பெற்ற மனிதன் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள் - 14.அவருடைய பேர் பிரசித்தமானபடியினால், ஏரோது ராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்தான், ஆகையால் அவனிடத்தில் இந்தப் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான். 15.சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறு சிலர்: அவர், ஒரு தீர்க்கதரிசி, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போலிருக்கிறாரென்று சொன்னார்கள். 16.ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன் நான் சிரச்சேதம் பண்ணின யோவான்தான்; அவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றான் - மாற்கு 6:14-16
இதற்கு காரணம், கர்த்தர் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் செய்த அற்புதங்களுக்கு ஒப்பான அற்புதங்களை மாத்திரமே செய்து கொண்டு வந்தார், உதாரணத்திற்கு கர்த்தர் கொந்தளிக்கும் கடலை அமைதி படுத்தினார், ஆனால் மோசேயோ செங்கடலையே இரண்டாக பிரித்திருந்தார், மோசே செங்கடலை இரண்டாக பிரித்ததை கண்ட ஜனங்கள் மோசேயை ஒரு விசேஷித்தவர்[தேவனுடைய குமாரன்] என்று சொல்லவில்லை, அப்படி சொல்லவும் மாட்டார்கள், ஏனென்றால் ஜனங்களுக்கு, மோசேயின் பெற்றோரை குறித்தும், அவரின் பிறப்பை குறித்தும் நன்றாய் தெரியும் - 21.மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. 22.இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது - யாத்திராகமம் 14:21-22
கர்த்தர் செய்த இன்னொரு பெரிய அற்புதம், குஷ்டரோகியை தொட்டு சுகமாக்கினது, இதே அற்புதத்தை பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியாகிய எலிசாவும் செய்திருந்தார், அப்பொழுது சுகமான நாகமான் என்கிற குஷ்டரோகி, எலிசாவை பார்த்து நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லவில்லை - 14.அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான். 15.அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்துக்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்; இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான் - II இராஜாக்கள் 5:14-15
கர்த்தர் 5 அப்பங்களை கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்த பொழுது, சீஷர்கள் 12 கூடைகள் நிறைய மீதியான துணிக்கைகளை எடுத்தார்கள், ஆனால் அது போன்ற அற்புதத்தை பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியாகிய எலிசாவும் செய்திருந்தார், இருபது அப்பங்களையும் தாள் கதிர்களையும் கொண்டு நூறுபேர் போஷிக்கப்பட்டு, எல்லாரும் சாப்பிட்ட பிறகு மீதமும் எடுத்தார்கள் - 42.பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனுஷன் தேவனுடைய மனுஷனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் தாள் கதிர்களையும் கொண்டுவந்தான்; அப்பொழுது அவன்: ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு என்றான். 43.அதற்கு அவனுடைய பணிவிடைக்காரன்: இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்றான். அதற்கு அவன்: அதை ஜனங்களுக்குச் சாப்பிடக் கொடு; சாப்பிட்டபிற்பாடு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 44.அப்பொழுது அவர்களுக்கு முன்பாக அதை வைத்தான்; கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது - II இராஜாக்கள் 4:42-44
கர்த்தர் யவீரு என்கிற ஜெபஆலயத்தலைவனின் மகளை உயிரோடு எழுப்பினார், இதே அற்புதத்தை பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியாகிய எலிசாவும் செய்திருந்தார் - 32.எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, அந்தப் பிள்ளை அவன் கட்டிலின்மேல் செத்துக்கிடந்தான். 33.உள்ளே போய்த் தங்கள் இருவருக்கும் பின்னாக அவன் கதவைப் பூட்டி, கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்து, 34.கிட்டேபோய், தன் வாய் பிள்ளையின் வாயின்மேலும், தன் கண்கள் அவன் கண்களின்மேலும், தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின்மேலும் படும்படியாக அவன்மேல் குப்புறப் படுத்துக்கொண்டான்; அப்பொழுது பிள்ளையின் உடல் அனல் கொண்டது. 35.அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பக் கிட்டப் போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தப் பிள்ளை ஏழுதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான் - II இராஜாக்கள் 4:32-35
இப்படியாக கர்த்தர் செய்த அற்புதங்களேல்லாம், ஜனங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த பழைய ஏற்பாட்டு அற்புதங்களாகவே இருந்தது, அதனால் ஜனங்களும் கர்த்தரை எலியா என்றும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொன்னார்கள், அப்பொழுது கர்த்தர் தன் சீஷர்களிடம், "நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்" என்று கேட்கவில்லை, கேட்டிருந்தால், சீஷர்களும் கர்த்தரை எலியா என்றோ அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்று தான் சொல்லியிருப்பார்கள்.
நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்
எலியா சாறிபாத் விதவையின் வீட்டில், ஏறக்குறைய மூன்றரை வருடங்கள் அற்புதம் செய்தார், ஒவ்வொரு நாளும் அற்புதம் நடந்தால் தான் அந்த விதவையின் வீட்டில் அடுப்பே எரியும், அப்படிப்பட்ட சூழ்நிலையில், சாறிபாத் விதவை எலியாவை பார்த்து "நீர் தேவனுடைய குமாரன்" என்றே சாட்சி சொல்லவில்லை, கடைசியில் அந்த விதவையின் மகனையும் எலியா உயிரோடு எழுப்பினார், அப்பொழுதும் அந்த விதவை எலியாவை "நீர் தேவனுடைய மனுஷன்" என்றே சாட்சி பகிர்ந்தாள் - 22.கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான். 23.அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான். 24.அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள் - I இராஜாக்கள் 17:22-24
ஒருவர் நல்லவரை போல காணப்படலாம், ஒரு ஊழியக்காரராக கூட இருக்கலாம், ஆனால் அவர் நம்மோடு சில நாட்கள் தங்கியிருப்பார் என்றால், அவருடைய மனுஷ சுபாவம் வெளிப்பட்டு விடும், அவரை குறித்த கசப்புகளே மிஞ்சும், இவர் பரலோகத்தில் இருந்து வந்தவர் என்று தரிசனம் கண்டால் கூட ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
ஆனால் கர்த்தரோ தன் சீஷர்களுடன் சில வருடங்கள் தங்கி, ஒரு சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்து, அதன் பின்பு பெற்ற அறிக்கை தான், "நீர் கிறிஸ்து" அதாவது தேவனுடைய குமாரன் என்பது - 29.அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான். 30.அப்பொழுது, தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார் - மாற்கு 8:29-30
ஒரு தேசத்தை ஆளுபவரின் மகன், தான் யார் என்பதை மக்களுக்கு உணர்த்த, தன்னுடைய உயர்ந்த வஸ்திரத்தையும், செல்வத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்துவான், ஆனால் பரலோகத்தின் தேவனுடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிருஸ்து, ஏழை மனு ரூபமெடுத்து, சிலர் அவரை மரியாளுடைய குமாரன் என்று சொல்ல, சிலர் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்று சொல்ல, அதற்கு மத்தியில் ஒரு பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து, அதன் மூலமாக நிரூபித்தது தான் தேவனுடைய குமாரன் என்பது, அது தான் சிலுவையிலும் நடந்தது - நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள் - மத்தேயு 27:54
அடையாளமும் அற்புதமும் நடந்தாலும்
ஒரு முறை, இஸ்ரவேல் தேசத்தின் பிரதம மந்திரி, ஒரு நிகழ்ச்சியின் பொது, பழைய ஏற்பாட்டின் வரலாறு தொடங்கி, இஸ்ரவேல் தேசத்தின் கனிமவளம் முதல் அங்கு விளையும் அனைத்தையும் குறித்து பல மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார், ஆனால் அவரால் ஒரு வார்த்தை கூட இயேசு கிறிஸ்துவை பற்றி பேச முடியவில்லை, காரணம் யூதர்கள் யாரையும் மேசியா என்று எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், யாராவது பழைய ஏற்பாட்டுக்கு மாறாக நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று புதிய காரியங்களை உபதேசித்து, அடையாளத்தையும் அற்புதத்தையும் செய்தால், அவர் கொலை செய்யப்பட வேண்டும் என்று போதிக்கப்பட்டிருந்தார்கள் - 1.உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி: 2.நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், 3.அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார் - உபாகமம் 13:1-3
அப்படியிருக்கும் பொழுது பேதுரு எப்படி கர்த்தரை தேவனுடைய குமாரன் என்று சொன்னான்? எருசலேமிலிருந்து வந்த பரிசேயரையும், வேதபாரகரையும் பார்த்து , எந்த மனிதனால் தான், பாவ இச்சைக்கு இடம் கொடுத்து உங்களது அந்தரங்க உறுப்புகளை கழுவி கொள்கிறீர்களே என்று கேட்க முடியும்? பரிசுத்தராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே அதற்கு தகுதியானவர் என்பதை பேதுரு அறிந்திருந்தார், பேதுரு கர்த்தரின் வஸ்திரத்தையும் தோரணையையும் பார்த்து "நீர் கிறிஸ்து" என்று அறிக்கை செய்யவில்லை, கர்த்தர் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பார்த்து "நீர் கிறிஸ்து" என்று அறிக்கை செய்யவில்லை, மாறாக, கர்த்தரின் பரிசுத்த வாழ்க்கையை பார்த்தே "நீர் கிறிஸ்து" என்று அறிக்கை செய்தான் - 8.நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்து வருகிறீர்கள் என்றார் - மாற்கு 7:1-8
சிலர் உம்மை
ஊழியத்தின் துவக்கத்தில், கர்த்தர் தன் சீஷர்களிடம் "ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்" என்று கேட்டிருந்தால், முதலாவது ஏரோதை குறித்து பெருமையாக பேசி, அதன் பின்பு "ஏரோது ராஜாவே உம்மை யோவான்ஸ்நானன்" என்றும், அது மாத்திரம் இல்லாமல், ஜனங்கள் உம்மை இப்படியெல்லாம் சொல்லுகிறார்கள் என்றும் சந்தோஷத்தோடு சொல்லியிருப்பார்கள், ஆனால் கர்த்தர் சீஷர்களிடம் ஒன்றுமே கேட்கவில்லை - 14.அவருடைய பேர் பிரசித்தமானபடியினால், ஏரோது ராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்தான், ஆகையால் அவனிடத்தில் இந்தப் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான். 15.சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறு சிலர்: அவர், ஒரு தீர்க்கதரிசி, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போலிருக்கிறாரென்று சொன்னார்கள். 16.ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன் நான் சிரச்சேதம் பண்ணின யோவான்தான்; அவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றான் - மாற்கு 6:14-16
ஆனால் இப்பொழுதோ கர்த்தரின் வல்லமையையும், மகத்துவத்தையும், காற்றும் கடலும் கர்த்தருக்கு கீழ்ப்படிவதை கண்ட சீஷர்களுக்கு, ஏரோது ஒரு பொருட்டாகவே இல்லை, அதனால் "ஏரோது ராஜாவே உம்மை யோவான்ஸ்நானன்" என்று சொல்வதற்கு பதிலாக "சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்று சொல்லுகிறார்கள்" என்று சொன்னார்கள், இப்படியாக கர்த்தரின் மகத்துவத்தை அறிந்த சீஷர்களுக்கு இந்த உலக மேன்மை எல்லாம் ஒன்றுமே இல்லாமல் போய் விட்டது - 27.பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டு, பிலிப்புச் செசரியா பட்டணத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 28.அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள் - மாற்கு 8:27-28
Next Chapter: Mother of Jesus in the Book of John