Lessons of Jesus
Chapter 1: Couldn’t even find time to eat
Chapter 1: Couldn’t even find time to eat
Previous Chapter: Introduction
ஒரு வேதாகம கல்லூரி ஆசிரியர் போல, இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களுடன் வாழ்ந்து, முரட்டாட்டமுள்ளவர்களாய் இருந்தவர்களை, எப்படியாக தன்னுடைய பிள்ளைகளாய் மாற்றினார் என்பதை "இயேசுவின் போதனைகள்" என்கிற தலைப்பில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
காற்றையும் கடலையும் அடக்கின கர்த்தர், தொடர்ந்தார் போல சில பிரமிக்கத்தக்க அற்புதங்களை செய்தார், லேகியோன் என்கிற திரள்கூட்ட பிசாசுகள் பிடித்திருந்த மனிதனை சுகப்படுத்தினார், அதன் பின்பு ஜெபஆலயத்தலைவனாகிய யவீருவின் மகளை உயிரோடு எழுப்பினார், இந்த அற்புதங்களை கண்ட சீஷர்கள் கர்த்தரின் வல்லமையை புரிந்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
இந்த அற்புதங்கள் அடுத்தடுத்து நடந்ததாக மத்தேயு, மார்க், லுக்கா என மூன்று சுவிசேஷ புத்தகத்திலும் எழுதப்பட்டுள்ளது, ஏனென்றால் இந்த அற்புதங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பல தேவரகசியங்களையும் நாம் அறிந்து கொள்ள முடியும், முதலாவது, லேகியோன் என்கிற திரள்கூட்ட பிசாசுகள் பிடித்திருந்த மனிதனை சுகப்படுத்தின கர்த்தர் இப்படியாக கட்டளையிட்டார் - 38.பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்பட உத்தரவு கேட்டான். 39.இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான் - லூக்கா 8:38-39
அதன் பின்பு ஜெபஆலயத்தலைவனாகிய யவீருவின் மகளை உயிரோடு எழுப்பின கர்த்தர் இப்படியாக கட்டளையிட்டார் - 54.எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். 55.அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது, உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார். 56.அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார் - லூக்கா 8:54-56
இந்த இரண்டு அற்புதங்களையும் செய்த பின்பு, கர்த்தர் இட்ட கட்டளை சீஷர்களுக்கு குழப்பமாகத்தான் இருந்திருக்கும், ஏனென்றால் நிர்வாணியாய் வந்தவனிடம் "நீ போய் பிரசங்கி" என்றார், நல்ல வஸ்திரம் தரித்தவனாய் வந்த ஜெப ஆலய தலைவனாக வந்தவனிடம் "நீ பிரசங்கிக்க வேண்டாம்" என்றார் .
லேகியோன் பிசாசுகள் பிடித்தவன், வஸ்திரம் இல்லாதவனாய் துர்நாற்றம் உள்ள மனுஷனாய், புத்தி பேதலித்தவனாய், சரீரமெல்லாம் காயங்களுடன் கர்த்தர் முன்பாக வந்து விழுந்தான், ஆனால் யவீருவுவோ நல்ல வஸ்திரம் தரித்தவனாய் ஜெப ஆலய தலைவனாய், வேதஞானமும், நல்ல குடும்ப பின்னணியும், ஆள் பலமும், பண பலமும் உள்ள, ஒரு மரியாதைக்குரிய பாத்திரமாய் கர்த்தருக்கு முன்பாக வந்து விழுந்தான்.
இவைகளையெல்லாம் பார்க்கும் பொழுது கர்த்தரை அறிவிப்பதற்கு மிகவும் தகுதியான ஆள் யார் என்றால் அந்த யவிரு தான், ஆனால் கர்த்தரோ எந்த தகுதியும் இல்லாத, நிர்வாணியாய் அலைந்து கொண்டிருந்தவனை, சுகப்படுத்தி, வஸ்திரம் கொடுத்து, ஊழியத்திற்கு அனுப்பினார், ஏனென்றால் பிசாசுகள் விட்டுப்போன மனுஷனுடைய இருதயத்தில் இயேசு ஒரு மெய்யான தெய்வமாக இருந்தார், அதனால் தான் இயேசு அவனிடம் "தேவன்" உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி அனுப்ப, அவனோ "இயேசு" தனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவித்தான்.
ஒருவேளை கர்த்தர் வேதஞானமும் பழைய ஏற்பாடு காரியங்கள் எல்லாவற்றையும் அறிந்திருந்த யவீருவை ஊழியத்திற்கு அனுப்பியிருந்தால், அவர் என்ன விதமாய் பிரசங்கித்திருப்பார்? நான் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியாகிய எலியாவையும் எலிசாவையும் குறித்து படித்திருக்கிறேன், இதோ நமது சபைக்கு வந்திருக்கும் இயேசுவும் அதே போல அற்புதத்தை செய்தவர், அவர் இன்னும் பல அற்புதங்கள் செய்ய வாழ்த்துகிறேன் என்றே பிரசங்கித்திருப்பார், அதினால் ஆத்தும இரட்சிப்பு உண்டாகுமா? இல்லவே இல்லை!
அதனால் தான் கர்த்தர், தன்னை தேவன் என்பதை அறிந்துக் கொண்டவனை, அதாவது லேகியோன் பிசாசுகளிடம் இருந்து விடுதலை பெற்றவனை ஊழியத்திற்கு அனுப்பினார், அவனே கர்த்தரால் ஊழியத்திற்கு அனுப்பப்பட்ட முதல் ஆள், ஆனால் சீஷர்களோ இன்னும் கர்த்தர் தான் தேவன் என்பதை அறியாமல் இருந்தார்கள்.
Next Chapter: Mother of Jesus in the Book of John